பிரதோஷ காலத்தில் முதலில் நந்திதேவருக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும். அரிசி மாவினால் அகல் செய்து தூய்மையான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்ற வேண்டும். அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷ கால அபிஷேக முறையில் "பால் அபிஷேகம்'' என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆகவே பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்து இயன்றளவு பால் கொண்டு வந்து கொடுத்து அபிஷேகத்தில் கலந்து கொள்வது சிறப்பான பலனைத் தரும்.
அத்துடன் தாய்மார்கள் பால் குடம் எடுத்துக் கொண்டு முறையாக கோவிலை ஒருமுறை வலம் வந்து, பிறகு அக்குடங்களில் உள்ள பாலைக் கொண்டே அபிஷேகம் செய்வது என்பது மிகவும் சிறப்பான பலனைத் தரும். நந்திதேவருக்கு அபிஷேகம் செய்யும் அதே நேரத்தில், தேவியுடன் கூடிய சந்திரசேகர சாமிக்கும் அபிஷேகம் செய்து அலங்கரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பிறகு கோவிலை மூன்று முறை வலம் வரச் செய்ய வேண்டும். கூடவே நாமும் உடன் சென்று வலம் வருதல் வேண்டும். அப்போது முதல் சுற்றில் வேதபாராயணமும், இரண்டாவது சுற்றி திருமுறைபாராயணமும், மூன்றாவது சுற்றில் நாதஸ்வர இன்னிசையும் இசைக்க வேண்டும்.
அத்துடன், பிரதோஷ காலத்தில் சாமி வலம் வரும்போது வெண்சாமரம் வீசுவதுடன், குளிர்ச்சி தரும் மருத்துவ குணம்கொண்ட மயில்பீலியிலான விசிறிகளைக் கொண்டு வீசுவதும் மிகுந்த பலன் தருவதாகும். சிவபெருமான் நஞ்சுண்டு களைத்திருந்த நேரத்தில் அஸ்வினி தேவர்கள் மயில்பீலியைக் கொண்டு விசிறினார்கள் என்கிறது புராணம்.
சாமி வலம் வரும் ஒவ்வொரு சுற்றிலும் மூலகோண திசைகளில் கண்டிப்பாக தீப வழிபாடு செய்ய வேண்டும். அத்துடன் சாமி மூன்றாவது சுற்றுவரும் போது மட்டும் வடகிழக்கு மூலையான ஈசான மூலையில் சாமியைத் தெற்கு திசை நோக்கி இருக்குமாறு சிறிது நேரம் நிறுத்தி சிறப்பு தீபவழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை "பூத நிருத்த வழிபாடு'' என்று கூறுவர்.
அந்த நேரத்தில் சாமியைத் தரிசித்து வணங்கி வழிபாடு செய்வது பெரும் புண்ணியமாகும். அவ்வாறு சாமி அன்னையுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் அழகை தரிசித்து பலன் பெற விரும்புவோர் முதலில் நந்திதேவரைத் தரிசித்து, பிறகு அன்னையைத் தரிசித்து, அதன் பிறகுதான் ஈசனை தரிசித்து வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
1.சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான்.
2.பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசுவரனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.
3.பிரதோஷ நேரத்தில் ஈசுவரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம்.
4.பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
5.சிவபெருமான் விஷம் குடித்தது சனிக்கிழமை. எனவே சனி பிரதோஷம் மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
6.நித்திய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாதப்பிர தோஷம், மகாப்பிரதோஷம், பிரயைப்பிரதோஷம் என பிரதோஷம் 5 வகைப்படும்.
7.தினமும் அதிகாலை சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்பு, நட்சத்திரங்கள் தோன்றும் வரை உள்ள காலம் நித்திய பிரதோஷம் ஆகும்.
8. சுக்லபட்ச சதுர்த்தியின் மாலை நேரம் பட்ச பிரதோஷமாகும்.
9.கிருஷ்ணபட்ச திரயோதசி தினத்தை மாத பிரதோஷம் என்கிறார்கள்.
10.பிரளய காலத்தில் எல்லாம் சிவனிடம் ஒடுங்குவதால் அது பிரளய பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது.
11.பிரதோஷ நேரத்தில் சிவாலயத்தில் இருக்க இயலா விட்டாலும், ஈசுவரனை மனதில் நினைத்து கொண்டால் நினைத்தது நடக்கும்.
12.இரவும்,பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத்காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதே போல பகலும், இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யஷத் காலம். இதன் அதிதேவதை சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் அந்த நேரம் பிரத்யுஷத் காலம் என அழைக்கப்பட்டது. நாளடைவில் அது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்'' ஆகிவிட்டது.
13.பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.
14.சனிப்பிரதோஷம் தினத்தன்று விரதம் தொடங்கி, பிரதோஷம் தோறும் விரதம் இருந்து வந்தால், ஈசுவரனிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும்.
15.பிரதோஷ நாட்களில் தவறாது விரதம் இருந்து வழிபட்டால் கடன், வறுமை, நோய், பயம், மரண வேதனை நீங்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்து.
16.பச்சரிசி, பயித்தம் பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது.
17.பிரதோஷ கால விரதம் தொடங்குவோர் ஆவணி, கார்த்திகை ஆகிய மாதங்களில் தொடங்குவது மகா உத்தமம்.
18.பிரதோஷ நேரத்தில் பெருமாள் கயிலாய மலையில் இருப்பதால், பிரதோஷ நேரத்தில் பெருமாள் கோவில்களில் திரை போட்டு மூடி இருப்பார்கள்.
19.ஆண்டுக்கு 25 தடவை பிரதோஷம் வருகிறது.
20.ஒவ்வொரு பிரதோஷத்திலும் வில்வ இலை அலங்காரம் செய்து பூஜித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.*
No comments:
Post a Comment