தீபாவளி தானம்!!!
சொர்ணம் என்பது தங்கம் ஆகும். தனூர்வ்யதி பாதம் அன்று சொர்ண தானம் மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது.
வெற்றிலை,பாக்கு, தேங்காய், தட்சனை, துளசி தளம் மற்றும் சிறிதளவு தங்கம் வைத்து தானமாக கொடுக்க வேண்டும்.
பெண்கள் கல்யாணத்திற்காக, எத்தனையோ நபர்கள் திருமாங்கல்யம் செய்ய பலரிடம் பண உதவி கேட்கிறார்கள்.
வசதி உள்ளவர்கள் இந்த மாதிரி நாட்களில் அவர்களுக்கு சிறிதளவு தங்கம் தானம் செய்யலாம். இப்படி பலர் கொடுப்பதைக் கொண்டு அவர்கள் திருமாங்கல்யம் செய்து கொள்வார்கள். தானம் கொடுத்த தங்கம் நல்ல விதமாகவும் உபயோகம் ஆகும். இப்படி சிறிதளவே தங்கம் தானம் கொடுத்தாலும் சொர்ணதானம் கொடுத்தோம் என்ற மனநிறைவும் இருக்கும். சிறிதளவே கொடுப்பதினால் சக்திக்கு மீறியதாகவும் ஆகாது.
ஒரு சுமங்கலிக்கு புடவை வாங்கி கொடுப்பதானாலும், 500 ரூபாய்க்குக் குறையாமல் ஆகிறது. அந்த மாதிரி புடவை வாங்கிக் கொடுக்கும் பணத்திற்கு திருமாங்கல்யத்துடன் கோர்த்து கொள்ளும் குண்டு, கோதிமணி, லட்சுமி காசு இப்படி ஏதாவது வாங்கி சொர்ண தானம் கொடுக்கும் சமயத்தில் தானமாக கொடுக்கலாம்.
தீபாவளி தானம் தீபாவளி தினத்தன்று செய்ய வேண்டிய தானம் வருமாறு:- தீபாவளி அன்று அவசியம் வஸ்த்ர தானம் செய்ய வேண்டும். நம்மால் முடிந்தால் ஏழை எளியவர்களுக்கு துணிமணிகள் வாங்கி கொடுக்கலாம் ஒரு ஏழைக்காவது வேஷ்டி, துண்டு, ரவிக்கை வாங்கி கொடுப்பது நல்லது. நமது உறவினர்களில் சற்று கஷ்டமான நிலையில் உள்ளவர்களுக்கு நம் மால் முடிந்த வகையில் பண்டிகைக்கு அவர்களுக்கு இப்படி உதவலாம். ஆனால் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் சிரமமான நிலையில் இருப்பவர்களுக்கு துணிமணிகள் வாங்கி கொடுப்பதை விட உணவுக்கு ஆகும் மாதிரி நம்மால் முடிந்த பொருள் உதவி செய்வது மேலும் புண்ணியம் தரும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தீபாவளியின் வரலாறு
தீபம்’ என்றால் ஒளி விளக்கு. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம். இந்த தீபாவளி திருநாள் நமக்கு கிடைக்க முதற்காரணம் நரகாசுரன் தான்.
நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
இந்த நாள் தான் தீபாவளி தீபாவளி வரலாறை பார்க்கலாம்…
பூமாதேவியின் அம்சமாக மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும், பூமாதேவிக்கும் மகானாக பிறந்தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாகத் தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆக ஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான்.
பெரிய மகரிஷி குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் படித்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.
இதற்கு நடுவில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவ்ம் செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, “அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், ஏதாவது வரம் கேள்” என்றார். “நான் சாகக்கூடாது ,எனக்கு சாகா வரம் அருளுங்கள்” என்று கேட்டான்.
அதற்கு பிரம்மா, உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள் அழியத்தான் வேண்டும். அது தர இயலாது ஆகையால் வேறு எதாவது கேள்”என்றார். ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு யார்மூலமாகவும் மரணம் அடையக்கூடாது என்ற வரத்தை நரகாசுரன் கேட்டான்.
நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய் என்று பிரம்மா வரம் அளித்தார். சாகா வரம் கிடைத்த நரகாசுரனின் அட்டகாசம் அதிகரித்தது. எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திரலோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான்.
இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், மிஞ்சிய சிலர் மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டனர். கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன் என்றார் கிருஷ்ணர். கிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார்.
அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள்.
அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் கடாயுத்தை வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர், ஆனால் காரணம் இல்லாமல் காரியமா?
பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததுப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள், “என் கண்ணனுக்கா இந்த நிலை” என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் கீழே சாய்ந்தான்.
அவன் கேட்டபடி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான். அவனுக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான வரனைக் கொடுப்பதாகச் சொன்னார்.
நரகாசுரனோ தான் இறக்கும் இந்நாளை எல்லோரும் காலையில் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, பின் தீபங்கள் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். தீப ஒளி நாம் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றி வைப்போம்.
No comments:
Post a Comment